Tuesday 7 December 2021

குட்டித்தம்பியின் வீட்டில் மூன்று அறைகள் இருக்கின்றன.
சமையலறை முழுவதும் சாக்லேட்டும் ஐஸ்கிரீமும் நிறைந்திருக்க
கூடமும் தாழ்வாரமும்
குதூகலம் நிறைந்திருக்க
தோட்டமெங்கும் அவன் சிரிப்பூ மலர்ந்திருக்க
நிலாவோடு பேச இருக்கையொன்றும் ஆங்கே.
ஆடிப்பாடிக்களித்த களைப்பில்
படுக்கையறையில் நாய் பூனை கரடி சிறுத்தையோடு ஐவராகிறான்.
பாடப்புத்தகங்களுக்கு இடமில்லாத வீட்டுக்குள்
கூத்தும் கும்மாளமும் பொங்கி வழியுது.
இன்னும் நாலுபேர் வந்தால் என்ன செய்வதென்ற கேள்வியொன்றின் வினையாய்
அட்டைகளை இடமாற்றி
பெரிய வீடொன்றைக் கட்டுகிறான் சடுதியில்.
தொகுப்பு வீட்டின் நெரிசலுக்கு நடுவே
ஏக்கப் பெருமூச்சோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

Friday 19 November 2021

பிடியளவு தானியங்களில்
பசியடங்கிப்போகும் கோழிக்குஞ்சென
ஓரிரு வார்த்தைகளில் சமாதானப்பட்டுவிடுகிறது அன்பின் கோபம் 🖤

Tuesday 28 September 2021

விலகி விலகி சென்று கொண்டிருக்கிறாய்
தொலைவில் சென்றுவிட்ட போதும்
புள்ளியாய் ஒளிர்கின்றாய் என் பார்வைக்கு
அருகருகே நெடுநேரமாய் நிற்கும்போதும்
அப்போதுதான் பார்த்ததாய் வியந்து சொல்கிறாய்
நேரமாகிவிட்டதாய் சடுதியில் விடைபெற்று
மற்றவர்களோடு மணிக்கணக்கில் அளவளாவுகிறாய்
அலைபேசி அழைப்புகளை ஞாபகமாய்த் தவிர்க்கிறாய்
உன் அழைப்புகள் ஏற்கத் தாமதமெனில்
அடுக்கடுக்காய் காரணம் தேடுகிறாய்
சினம் கொண்ட உன் வார்த்தைகள் புதிதல்ல
முகம் பார்க்க மறுக்கும் உன் விழிகளே புதிது
இதோ அன்று கொண்டாடி நனைந்த பிரியத்தின் மழைத்தூறல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை.
உன் ஒற்றைத்தும்மலொலி கேட்டு
அருமருந்தொன்று கொதிக்கிறது அடுப்பில்
அருந்திய பின் தொடர் உன் ஆசைப்படி

Saturday 24 July 2021

ஒவ்வொரு நாளும் உள்நுழையும் இருள்
வாழ்வின் இறுதிக்கணங்களை கண்முன்னே காட்சியெனத் தருகிறது
இரவு கவிந்து சாமம் தொடங்கும் பொழுதில்
விழித்திருக்கும் உயிருணரும் தனிமை
மரணமன்றி வேறேது?
உடல் பிரிந்த உயிர் நினைவுகள்தோறும் தாவி
கனவொன்றின் மேல் இளைப்பாறுகையில்
மீண்டு வரும் நினைவலைகள் தருவது சிறகெனில் 
காலையில் உயிர்த்தெழுதலும்
விலங்கெனில் மரணித்தலும்
புலர் காலையில் நியதியாகிறது.
மீண்டும் வாழ்வா மரணமா
என்பதை நிர்ணயிக்க இருள் கவ்வும்
மாலை வரை உயிர்த்திருக்கும் உயிர்

Saturday 17 July 2021

நீ சொல்கிறாய்
நான் உன் சொல்லாகிக்கொண்டு இருக்கிறேன் 🖤
நீ சொல்கிறாய்
நான் உன் சொல்லாகிக்கொண்டு இருக்கிறேன்🖤

Thursday 15 July 2021

நின் வரவை எதிர்நோக்கியிருக்கையில்
நித்திரையெனவே வந்து இமை தழுவுகிறாய்
அமுது சமைக்க எரிக்கும் தீயும்
ஆடை பற்றும் தீயும்
ஒன்றெனக் கொள்ளலாகாது

Thursday 8 July 2021

ஒரு புள்ளியில் நிறுத்திவைத்தாய்..

பார்ப்பவர்க்கு அது புள்ளியாய்த் தெரியலாம்

பெரும்பாறையில் முட்டிக் கொண்டதுபோல் குருதியில் நசநசத்து
தவித்தலையும் என் உயிரின் அழுகையை நீ கேட்டிருக்கக்கூடும்

அதை ஒரு புன்சிரிப்போடு கடந்திருப்பாய் இந்நேரம்



Thursday 1 July 2021

வார்த்தைகளை வரிசைப்படுத்துகிறேன்
பார்வையின் அனலில்
உருகிச் சிவக்கின்றன
வரிசை கலைந்து
சரிந்து விழுவனவற்றை
மேலொன்றாக அடுக்குகிறேன்
மெய்ப்புள்ளிகளின் கனம் தாளாது
நொறுங்கிச் சிதைகின்றன
வார்த்தைகளைப் பிரித்தெடுத்து
பத்திரப்படுத்தி
வைக்கிறேன்
என்
மௌனத்தின் பெட்டகமது
நிறைந்து வழிகிறது
இதுவரை மொழிந்திராத இவ்வார்த்தைகளின்
கனம் தாங்கி
பொருளுணரும்
உயிரொன்றிடம் சேர்ப்பிக்கும்
காலம் வரை
மௌனத்தை சுமந்து திரிவேன் 🖤

Wednesday 30 June 2021

குழந்தைகள் வரையும் வீட்டில்
தவறாமல் முளைக்கிறது
கிளைபரப்பிய மரமொன்று
🏡
நேற்றைய மாலை வெளிச்சமாய்த்தானிருந்தது
விளக்கொன்றும் ஏற்றவில்லை
பின்னைப்பொழுதில்
இருளின் விரல்கள் தீண்டத்துவங்கிய கணத்தில்
விளக்கினை ஏற்றித்திரியைத் தூண்டினேன்
நிறைந்த ஒளிவெள்ளத்தில்
நிழலெனச் சரிபாதி இருள் சூழ்ந்தது
இருளில்லா ஒளியைத் தேடிய பொழுதில்
நித்திரை வந்து சுமையென அழுத்த 
இமைமூடிய கணமொன்றில்
இருள் என் கண்களுக்குள் ஒளிர்ந்தது.

Saturday 26 June 2021

லேட்டாகும்
என்ற ஒற்றைச் சொல்லில்
அவர்களுக்கு
முடிந்துவிடுவது போல்
அத்தனை எளிதில்லை பெண்ணுக்கு.
"சுண்டல் செய்து வச்சிருக்கேன்
காபி டிகாக்ஷன் தயாரா இருக்கு.
இரவுக்குக்கூட மாவிருக்கு.
முடிஞ்ச உடனே வந்துடுவேன்"
இப்படி 
அடுக்கடுக்காய்
சமாதானங்களை முன்வைத்தாலும்
மச மசன்னு நிக்காம
சீக்கிரம் வந்து சேரும் வழியப்பாரு
என்ற 
எச்சரிக்கையோடுதான்
எங்கள் ஒரு மணிநேரத் தாமதம் கூட.

Friday 25 June 2021

உன் இருத்தலைச் சொல்லும்
ஏதோ ஒரு சிறு குறிப்பில்
என்னுயிர் இளைப்பாறும் 🖤

Thursday 24 June 2021

மழைக்கான வேண்டலுக்கு
குடையோடு வந்த சிறுவனின் நம்பிக்கையையொத்தது
என் காத்திருப்பு

Sunday 13 June 2021

நினைவுகள் கூடப் பிணியில் துவளும் வலுவற்ற தருணமிதில்
விரல் பிணைக்க வருவாயா ♡
எதுவொன்றை இழந்தாலும் நட்டம்தான் என்றில்லை
உன்னில் எனைத் தொலைத்தபோது அறிந்தேன் ♡

Sunday 6 June 2021

பழுத்த இலையென உதிரத்தான் போகுது உயிர் என்றேனும்.
பறவையைப் போல் சிறகசைத்துப் பறக்க
தடையென்ன இன்று?

Tuesday 4 May 2021

தனிமை வாய்க்கப்பெறும் பொழுதுகளில்
அனிச்சையாய் 
இதழ்கள் உச்சரிக்கும் பெயர் 
உனதாகிறது🖤

Thursday 4 March 2021

ஒதுக்கித் தள்ளும் அலைதானே
இழுத்தணைத்தும் கொள்கிறது!?! 🧡

Wednesday 24 February 2021

தனதான வீடொன்றில் நுழைகிறாள்.
அவ்வீடு
அவளை
முற்றும் முழுதாக
ஆட்கொள்ளவோ
விழுங்கவோ செய்கிறது

Friday 19 February 2021

உள்ளே இரு
பத்திரமாய் இரு
கவனமாயிரு
எச்சரிக்கையாய் இரு
எட்டிப்பார்க்காதே
முகம் காட்டாதே
சிரித்து சிலிர்க்காதே
உரத்துப் பேசாதே
கோபம் கொள்ளாதே
குரலுயர்த்தாதே
அடங்கிக்கிட
சுண்டுவிரல் தெரிய உடையணியாதே
இழுத்து மூடு உடலை...

இளமை ததும்பும் பருவப்பெண்ணுக்குச் சொல்லவில்லை இதெல்லாம்...
பால்குடிக்கும் பச்சிளம் பெண்சிசுக்களுக்கே சொல்கிறேன் இன்று.
மூன்று வயதுப் பிஞ்சு,
ஏழு வயதுக் குருத்து,
பதின்வயதுப் பாவையர்,
மூத்தகுடிப் பெண்மணிகள்...

எவரையும் விட்டுவைக்க மனதில்லை உங்கள் காமத்திற்கு...
எனில் தீர்வு ஒன்றையொன்று தான் சகோதரர்களே.

#இனி_பெண்_என்றோரினம்_பிறப்பற்றுப்_போவதுதான்_ஒரு_நூற்றாண்டுக்காவது

Monday 15 February 2021

நிழலுக்காகத் தன்னைத்
தஞ்சமடையும் மனிதரிடம்
புத்தனின் சாயலைத் தேடுகிறது போதிமரம்

Friday 12 February 2021

முற்றும் முடிவாய்
உன்னுள் கரைந்து உறைவதன்றி
காதல் என்பது வேறேது ❤️
'நேற்றும் முடியல உடம்புக்கு.
இன்று பரவாயில்ல எப்படியாவது வந்துடறேன்'
என்று பரிதவிக்கும் உன் வார்த்தையிலும்
'வேண்டாம் அலைச்சல், பிறகு பார்க்கலாம்'
என்று மறுத்துரைக்கும் என் வார்த்தையிலும்
உள்ளீடாய் இழையோடுவதன்றி
காதலென்பது வேறேது ❤️
ஒவ்வாத உணவு மிகும்போது 
உன் உணவுத்தட்டைப் பிடுங்கிச்செல்லும்
என் அடாவடியன்றி
காதல் என்பது வேறேது ❤️
தாமதத்திற்குக் கோபிக்காமல்
பசியோடு வந்ததற்குச் சினந்துகொள்ளும் உன் பரிவன்றிக்
காதல் என்பது வேறேது ❤️
பார்த்தால் சரியாகும் என்கிறாய்.
பார்த்துத் தொலைச்சா மட்டும்? என்கிறேன் 
பார்ப்பதற்கும்
பார்த்துத் தொலைவதற்குமிடையிலான
காத்திருத்தலன்றிக்
காதல் என்பது வேறேது ❤️
இலைமறைவில் பூப்போல...
இதயத்துள் ஒளிவு மறைவாய்... 
காதல் 🖤


Thursday 11 February 2021

பசி குடைகிறது
நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன்
நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன்
மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன்
மாதங்கள்
ஆண்டுகளென
விழுங்கியும்
ஆறாப் பசியடங்க
காலப் பெட்டகத்தைக்
கைக்கொள்ளத் தேடுகின்றேன்

Tuesday 2 February 2021

சொல்லொன்று தொக்கி நிற்கிறது எதனோடும் சேராமலே
வேறு வார்த்தைகளோடு இணையவில்லை
எந்த வாய்மொழியோடும் இணக்கமில்லை
ஏதுமற்ற ஒன்றாய் நிற்பதுபோன்ற தொனியில்
எதையோ சொல்லத்துடிக்கிறது
ஒரு அணுக்கமான இதயம் தேடி
அனுசரனையான வாக்கியம்தேடி
பொருள்பொதிந்த இலக்கியம்தேடி
இலக்கண வரம்புகள் மீறாத கவிதையொன்றை நாடி
சொல்லொன்று அலைபாய்கிறது
தன்னியல்பு மாறாது தம்மை
எடுத்தாளுவோர் விரல்தேடி.

Monday 1 February 2021

"இந்த அடியை மறக்காதே"
என்று பிரிந்த 
விடுமுறைக்காலங்கள் முடிந்துபோயின.
அடியை மறக்கவில்லை.
அடியே!
நீ எங்கே?

என் பால்யத்தின் வண்ணங்கள் நிறைந்திருக்கும் 
இவ்வீதியைக் கடக்கும் கணங்களில்
வண்ணத்துப்பூச்சி ஆகிறேன் 🦋🦋
அமர்ந்து பேசிக் கழித்த 
பெருந்திண்ணைகளைத் தொலைத்த வீடுகள் இன்று
மின்சாரம் போன இரவுகளில் ஆடிய கண்ணாமூச்சியும்
கோடிட்ட எல்லைகளுக்குள் 
கல்லா மண்ணா ஆடி 
கண்டெடுத்த காயங்களும்
வீதிக்கு உயிர் கொடுத்த காலமது
அலைபேசிக்குள் முகம் புதைத்து
பால்யம் தொலைத்த குழந்தைகளும்
கொடூர ஒலியெழுப்பும் வாகனங்களின் போக்குவரத்துமாய்
வேற்று முகம் அணிந்து வெகுநாட்களாகியும்
கடந்து செல்லும் பொழுதுகளில்
பாதங்கள் உணரும் உயிர்ப்பும் சிலிர்ப்பும்
சற்றும் குறையவில்லை
இதோ!
வீதிக்குள் நுழையும் கணம்
படபடத்துச் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியொன்று 🦋🦋