Monday, 11 August 2025

இருள்கீறி உள்நுழையும் ஒளியென
இதயம் கீறும் உன் நினைவுகள்.
வழுவழுத்த தரையில் திக்குமுக்காடும் அரவமென
அரவமின்றி அலைபாயும்.
கழுத்தைக் கட்டிக் கொஞ்சும் மழலையென
கணநேரம் கொண்டாடும்.
அழைக்கும் பொழுதில் பழிப்புக்காட்டி ஓடும் குழந்தையென போக்குக்காட்டும்.
அணைத்தே மடிசாய்க்கும் அன்னையென
அவதாரமெடுக்கும்.
வேண்டாமென்றே விலகி நின்றாலும்
அருகில் வந்து நின்று
அடாவடியாக ஆக்கிரமிக்கும்.

12/08/2021

Saturday, 12 July 2025

குருதி கசியும் பாதங்களோடு தொடர்கிறேன்.
இலக்கறியாத பயணமல்ல.
இடைமறிக்கும் தடைகள் பல.
கற்களும் முட்களும் கடந்து
கவனமாய்ப் பள்ளங்கள் தாண்டி.
குனிந்து நோக்க
காலடியில் பாதாளம்
கண்ணுக்கெட்டிய தொலைவில்
என் இலக்கின் உச்சி.
பெரும்பள்ளம் தாண்டும்
வலிமையுண்டு மனதில்.
சோர்ந்து துவண்ட பாதத்தை
சிலிர்த்தெழச் செய்கிறேன்.
எரிதழல் ஏந்துகிறேன் நெஞ்சில்.
கசியும் குருதி சுவடாய்ப் பதிந்து
பாதையை அடையாளங்காட்டும்.
பின்தொடர்ந்துவரும் எம்மக்கட்கு
பயணங்கள் இனிதாகட்டும்.

13.07.2021

Wednesday, 9 July 2025

தொலைதூர ரயில் ஒன்றின் முனகல் ஒலி 
நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது

அடுத்த ரயிலில்
அடுத்த ரயிலில் என
எல்லா ரயிலையும் விட்டு விட்டு 

அன்றைய
கடைசி ரயிலொன்றின் 
கடைசிப் பெட்டியில் 
கிளம்பும் நேரத்தில் 
தாவி ஏறிக் கையசைத்த 
உன் விரல்கள் பற்றி வந்திருக்கலாம் கூடவே

காலங்கள் கடந்தாலும்
ஏதோ ஒரு தண்டவாளத்தின்
அந்நாளுக்கான 
கடைசி ரயிலின் சத்தம்
விசும்பலாகத்தான் செவிகளில் கேட்கிறது இன்று வரையிலும்

09.07.2023

Wednesday, 2 July 2025

ஒரு துளி ஈரம் போதும் 
துளிர்க்க
ஒரு துளி அன்பு போதும்
உயிர்த்திருக்க.

03.07.2018