Wednesday 15 August 2018

மழையை
மழையென்றும் சொல்லலாம்
நீயென்றும் சொல்லலாம்.
மழையில்லா வாழ்வு
நீயில்லாப் பொழுதுபோல் கொடிது.
மழை நனைத்த மண்
உன் அண்மை போல்
குளிர்ந்தென்னை ஏந்திக்கொள்கிறது.
மழை சூடிய மரங்கள்
சாரல் சொரிந்து என்னை
சீராட்டும் வேளை
மழையில் தொலைந்த
கோடை வெம்மையென
உன்னில் என்னைத் தணிக்கிறேன்.
இப்போது
மழையென்றால் நானும்.

Thursday 9 August 2018

ரெக்கையசைத்துச் செல்லும் பட்டாம்பூச்சியின் வழிகாட்டுதலில்
இன்றைய என் பயணம்.
படபடத்துத் திரிந்தாலும்
பாதையில் குழப்பமில்லை போல.
தற்செயலா அது?
என் வழியில் முன்னே சென்று
வழிகாட்டிச் செல்கிறது.
பாதை மாறினால்தான் என்ன?
பட்டாம்பூச்சி சேருமிடம் மலர்வனம்தானே.
மலர்தோறும் தேனருந்தி
மயங்கிச் சிறிதே இளைப்பாறப்போகிறோம்
நானும்
என்
பட்டாம்பூச்சியும்.

10.08.2016