Monday 7 December 2020

மழைநிலத்துப் பதிந்த கால்தடமென
உறைகிறாய் என்னுள்
ஈர மண்ணுள் புதைந்த விதையென
உயிர்க்கத் தொடங்கும் காதல்
விதைபிளந்து 
மண்கீறி வெளிவருகிறது பசுந்தளிர்
மழைக்காலத்துக்கு பின்னான
இளவெயிலாய் எப்போதும்ப்போது நீ


Wednesday 2 December 2020

ஒரு மழைப்பொழுதின் தனிமை சுடுவதில்லை
கொட்டித்தீர்க்கும் மழையிடம்
மனதில் பட்டதை பேசித்தீர்க்கலாம்
நசநசக்கும் மழையோடு
செல்லச்சண்டை போடலாம்
அடர்தூறலோடு ஆடிக்களிக்கலாம்
விடாது பெய்யும் மழையோடு
உரிமையோடு சினக்கலாம்
சாரலோடு சமரசம் ஆகலாம்
மழையென்பது மனதோடு பேசும் நட்பன்றி வேறென்ன ❤️

Saturday 14 November 2020

தனிமை வாய்க்கப் பெறும் பொழுதுகளில் தொடக்கத்தில்
உன் பெயரைத்தானே உச்சரிக்கிறேன்🖤

Friday 6 November 2020

இன்று நீ சொன்ன அன்பின் வார்த்தைகளால் 
நேற்று நீ எய்த சொல்லம்புகளைப் பிடுங்கி எறிகின்றேன் 🖤

Wednesday 4 November 2020

புறங்கழுத்தில் கவ்வி குட்டியைத் தூக்கும் 
தாய்ப்பூனையின் லாவகமாய்
உன் சொற்கள்

Sunday 18 October 2020

உணர்வுகள் அழுத்த உறைந்திருக்கிறேன்.
முன்னதாக
ஒரு சோகம் எனைக் கவ்வியது.
மெல்ல மெல்ல உள்நுழைந்து
உயிரைத் தொட்டது.
தொடுதலின் முதல் கணத்தில்
மென்வலியொன்று ஊடுருவ
தரை சிந்திய நீர் விரவுதல் போல
மனமெங்கும் வியாபித்து
அடுத்தடுத்த கணங்களில்
பெருவலியாய் உருமாறி
உயிரெங்கும் நிறைந்து வழிய..
வலியைப் பருகிச் சுவைக்கின்றேன்.
சுவைத்துப் பருகுகின்றேன்.
தீராவலியொன்றைம் தேடத் துவங்குகிறேன்.
எங்கெங்கு வலியுளதோ
அங்கங்கு உறைகிறேன்.
வலியின் சுவையுணரா மனங்களை
எண்ணி நகைத்தே
மேலும் கொஞ்சம் வலியை தேடி
உணர்வுகள் அழுத்த
உறைந்திருக்கிறேன்

Tuesday 13 October 2020

நான் வருவதற்குள்ளாக பெய்து முடித்திருந்தது.
சாலையெங்கும் மழை நீர்
என்னில் உன் நினைவுகளைப் போல
வியாபித்து நனைத்திருந்தது.
நான் வருவதற்கு முன்பான மழையின் பிரவாகம்
உன் வருகையை எதிர்பார்த்து நிற்கும்
இதயத்தின் தவிப்பை ஒத்ததாயிருந்திருக்குமோ?! 🖤

Monday 12 October 2020

கடலும் காடும் ஒன்றா எனத்தெரியவில்லை
கடலுக்குள் முங்கும்போது
காட்டின் மடியில் தவழுகிறேன்
காடொன்றை நினைக்கையில்
கடலலையினைத் தழுவுகிறேன்❤️
ஒரு கவிதை...
கேள்வி கேட்கும்
விடையிறுக்கும்
தலைகோதும்
விழிநீர் துடைக்கும்
காதலிக்கும்
நட்பைக் கொண்டாடும்
துரோகத்தை மன்னிக்கும்
வெறுப்பை வேரறுக்கும்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
வாளாவிருக்கவும் செய்யும்
கூடி நின்று
விளக்குகள் ஒளிர்ந்தோம்
கைதட்டி ஆரவாரித்தோம்
விளக்கின் ஒளியிலும்
கைதட்டல் ஒலியிலும்
பாதை தெளிவாய் புலப்பட
கூட்டத்தை நோக்கி
கொரோனா தடையின்றி முன்னேறிக்கொண்டிருக்கிறது
ஒரு அரிசியில் என் பெயரெழுதிக் கொடுத்தவனின் பெயர்
அன்று முழுவதும்
எந்த அரிசியிலும் எழுதப்படவேயில்லை

Monday 28 September 2020

இதழ்களினின்றும் வெளிவரத்துடிக்கும் வார்த்தைகளை
கருணைக்கொலை செய்துவிட்டு
மௌனமெனும் அங்கியை போர்த்திக்கொள்கிறேன்
இன்று அதிகாலை சந்திக்க நேர்ந்த அந்தப் பறவை
யாதென அறியவில்லை.
வலசைநிமித்தம் வந்து சேர்ந்த விடத்து
ஓய்வாய் அமர்ந்த அழகில்
ஓர் திமிர் தென்பட்டது.
பல ஊர்கள் பார்த்த பறவைக்குச்
சொந்தமென பிடிமண் இல்லையென்பது
மனித மனதிற்கு விநோதம் தான்.
வானமே தனதென்ற அதன்
மனப்பாங்கு சற்றே எரிச்சல் தந்தது.
எதைத் தேடி என் சன்னல் வந்ததென்ற கேள்வி பொங்க 
முகம் பார்த்த எனக்கு பதிலேதும் தரவில்லை.
பிறந்த வீட்டு சீதனத்தில்
தாய்வாசம் நுகரும் பெண்பிள்ளைபோல
சாளரக் கதவில் அலகினைத் தேய்த்துக்
கண்மூடிக் கிடந்த கணத்தில் 
சொல்லாமல் சொன்ன செய்தியொன்றில் 
நழுவிப் போன மனதை
இருத்தி வைப்பதென்பது எளிதாயில்லை.
ஏதுமில்லை என்றே சொல்கிறாய்.
எல்லாம் புரிந்தே புன்னகைக்கிறேன் 🖤
சின்னஞ்சிறு கீறலுமற்ற
புன்னகையொன்றை பொத்தி வைக்கிறேன்
உன் முகம் பார்க்கும் பொழுதில் கையளிக்க🖤

Sunday 27 September 2020

நிழல்தரும் வழித்தருக்கள் 
ஏதுமற்ற பயணத்தில்
உன் வார்த்தைகளில் கொஞ்சம்
இளைப்பாறினேன்🖤

Saturday 26 September 2020

நிழல்தரும் வழித்தருக்கள் 
ஏதுமற்ற பயணத்தில்
உன் வார்த்தைகளில் கொஞ்சம்
இளைப்பாறினேன்🖤

Monday 14 September 2020

பயணத்தின்போது இடைவிடாது செவியில் கிசுகிசுக்கும் காற்று போல
தொடரும் 
உன் அன்பின் மொழி

Friday 11 September 2020

உன் மௌனத்தை எங்ஙனம் மொழிபெயர்க்க?
கோபத்தில் வரும் உன் வார்த்தைகளாகவா?
கொஞ்சலெனப் பார்க்கும் உன் பார்வையாகவா?
அலட்சியமாய் திருப்பிப் போகும் உன் பாவனையாகவா?
முதுகு காட்டி அழும் உன் விசும்பலாகவா?
முதன்முறை சந்திப்பில் விரிந்த உன் விழிகளின் ஒளியாகவா?
இதழ் பிரிக்காமல் கொல்லும் உன் மௌனமாகவேவா?

Tuesday 8 September 2020

இன்னமும் கண்திறவாத பூனைக்குட்டி
தத்தித் தத்தி வாசம் பிடித்து
தாய்மடி சேர்வது போல
சொற்களைத் திறவாமலேயே
உன் மனவாசம் உணர்ந்து
உனைச் சேர்ந்தேன்🖤
உன்னோடு அழைத்துச் செல்ல மறுக்கிறாய்
உன் கனவில் வருமென்னை
என்ன செய்வாய்?
இமைகளைத் திறந்த பின்பும்
வீழ்ந்து விடாதிருக்கிறது
என் கனவு
நேர்கோடொன்றே வசப்படுகிறது
அலை பொங்கும் கடலொன்றை
எப்படி வரைய?

நிகழ்வுகள் பலநேரம் நம்மை நகர்த்திச் செல்லுகின்றன.
சில நம்மை நகர்த்திவிட்டுச் செல்கின்றன.
மற்றும் சில புறக்கணித்துப் போகின்றன.
நமக்கானதுக்கும் நமக்கேற்றதுக்குமான
இடைவெளி உணருமுன்
நிகழ்ந்தே விடுகிறது அந்நிகழ்வு.

Saturday 29 August 2020

அன்னப்பறவையென
காற்றை இங்கேயும்
மழையை அங்கேயும்
பிரித்துத் தந்தது வானம்
மழை சுமந்த மேகமென 
விழி நிறைகிறேன்
உனைப் பிரியும் பொழுதுகளில் 🖤
வறண்டு போன நினைவுகளை உயிர்ப்பிக்கும்
அடிமனசின்
ஈரம் உலராத உயிரின் பிசுபிசுப்பு 🖤
வார்த்தைகள் பிடுங்கப்பட்ட
பெண்ணொருத்தியின் மௌனம்
தீயை உமிழ்கிறது 🔥🔥
வாழ்வையும் மரணத்தையும்
மூடிய இரு கரங்களுக்குள் எடுத்துச்செல்கிறேன்.
எந்தக்கரம் திறந்து ஏற்றுக்கொள்ளப்போகிறதோ
இன்றைப் பொழுது?!?!
லேட்டாகும்
என்ற ஒற்றைச் சொல்லில்
அவர்களுக்கு
முடிந்துவிடுவது போல்
அத்தனை எளிதில்லை பெண்ணுக்கு.
"சுண்டல் செய்து வச்சிருக்கேன்
காபி டிகாக்ஷன் தயாரா இருக்கு.
இரவுக்குக்கூட மாவிருக்கு.
முடிஞ்ச உடனே வந்துடுவேன்"
இப்படி 
அடுக்கடுக்காய்
சமாதானங்களை முன்வைத்தாலும்
மச மசன்னு நிக்காம
சீக்கிரம் வந்து சேரும் வழியப்பாரு
என்ற 
எச்சரிக்கையோடுதான்
எங்கள் ஒரு மணிநேரத் தாமதம் கூட.
உன்னைக் கண்டதும்
எனக்குள் பொதிந்திருந்த
உனக்கான சொற்கள் வெளிவருகின்றன
பெருமழைக்குப் பின் 
மண்கீறி
வெளிவரும் தளிர் போல.



பெருமழையொன்று
கடத்திச்செல்லும் வெம்மையைப்போல
உன் நினைவில் கடந்துசெல்கின்றது மனமெங்கும் நிறைந்து வழிந்த
ஆற்றாமை 🖤

Tuesday 25 August 2020

மருதாணிச் சொப்பென 
மனம் பூசிக்கொள்ளும்
பால்யத்தின் நினைவுகள் 
ஆழம் பொறுத்து
சிவப்பும் வெளிர் சிவப்புமாய்..

Monday 3 August 2020

குரல் கேட்டதும்
விழி கசிவது
நியூட்டனின் விதியா?🖤

Saturday 1 August 2020

உன் சாயலில்
ஒரு நதி பார்த்தேன்
ஒரு கடல் பார்த்தேன்
ஒரு மழை பார்த்தேன்
கண்ணாடியில்
என் முகம் பார்த்தேன் 💜
அடர் வனத்தின் 
மண் சுமந்த ஈரம் நானாக
நீயாகிறாய் பசுந்தளிரின் நிறமாய் 💚
எதையும் தீண்டவில்லை
கண்கொண்டு வெளிச்சம் பார்க்கவில்லை
செவிமடல்களைச் சேரவில்லை ஒலிகள் ஏதும்
உட்செல்லவில்லை உணவும் கூட
உயிருக்குள்
ஊடுருவி உறவாடுது 
உன் நினைவுகள் மட்டுமே 🖤

Monday 20 July 2020

யானை கண்ட விழியற்றவனின் 
உணர்தலாய் வாழ்க்கை
ஒரு கை தலையில்
கரடுமுரடென
காதுகள் தொடுகையில்
கிழிந்து தொங்க
தந்தங்கள் குத்திக் கிழிக்க
வாலொன்று சாட்டையென வீச
துதிக்கையில் சறுக்கி விழுகையில்
கூர்விழிப் பார்வையின் ஒளிமங்கி
பெருத்த வயிற்றின் நிழல் மொத்தத்தில்
காரிருளுக்குள் கரைந்து போனது
நீ
என் விழிகளின் உறக்கத்தோடு
உறக்கத்தின் கனவுகளையும் களவாடிச் சென்றுவிட்டதை
தலையணையிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன்🖤

Saturday 18 July 2020

திமிறிக்கொண்டு ஓடும் 
காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுக்கிறது 
வாழ்வின் மீதான பேரன்பு
எப்போதாவது.

அசராமல் அடித்துப்பெய்து
ஆளை நனைக்கும்
வாசல் மழையின் சுதந்திரம்
ஜன்னல் மழைக்கில்லை🖤

Saturday 11 July 2020

நீர் தேடி நீளும் வேரென
உனைத்தேடி
நீளும் நினைவுகள்

Thursday 9 July 2020

அடைக்கும் தாழில்லை
தடுக்கும் கதவில்லை
தனக்குத் தானே
விலங்கிட்டுக் கொள்ளும் மனது
திமிறிக்கொண்டு ஓடும் 
காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுக்கிறது 
வாழ்வின் மீதான பேரன்பு
எப்போதாவது.

Monday 6 July 2020

பூட்டி வைக்கின்றார்
ஔியனெப் பாய்கிறாள்
குரல்வளை நெறிக்கின்றார்
அறைகூவலனெ ஒலிக்கிறாள்
கொன்று புதைக்கின்றார் 
ஆங்கே
கங்கெனத் துளிர்க்கிறாள் 🔥
மஞ்சள் வானம்
வெள்ளை வெயில்
கண்கூசும் வெளிச்சம்.
எல்லாம் சரி... 
எங்கே என் மழை?
மரணம் என்பது மூச்சிழந்து போவது மட்டுமல்ல.

Saturday 4 July 2020

உயிர் நிறையும் பொழுதொன்றில்
உடன்நின்று
உரசிச் சிரிக்குது உன் முகம்🖤

Friday 22 May 2020

சிறுதுளி கூடக் குறையாது முழுவதுமாய் நிறைக்கிறாய் என்னை 🖤

Monday 27 April 2020

இதோ இங்கே அலை விளையாடும் கடலினிலே எனக்கோர் பங்குண்டு
நுரைத்துப் பொங்கிச் சீறி
கால் நனைக்கும் அலையினிலே
எனக்கோர் பங்குண்டு
பிரபஞ்சத்தின் புரிந்தறியா ரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும்
அதன் ஆழத்தில் 
எனக்கோர் பங்குண்டு
ஆர்ப்பரிக்கும் அலையறியாத
அதன் ஆழ்கடல் பேரமைதியில்
எனக்குப் பெரும்பங்குண்டு.
நடக்க நடக்க உள்ளிழுக்கும்
கடற்கரை மணற்பரப்பில்
எந்தன் பங்கும் புதைந்தே இருக்கிறது.
ஒற்றை மணல்துகள் ஒட்டிக்கொள்ள
தட்டிவிட எத்தனிக்கும் விரல்களறியாது
மானுடப் பரப்பின் ஏதோ ஒர் புள்ளியில்
எந்தன் சக மனிதன் புரியும் செயலின் வினையாய்க் கிளர்ந்தெழும் சகல பாவங்களும் 
எந்தன் வாழ்வோடு ஒட்டாமல் உதறிச்செல்லுதல் எளிதல்ல என்று.

Thursday 9 April 2020

சிறகுவிரித்தல் எளிது
தான்
பறந்துவிடுங்கள் சட்டென்று
அனுமானங்களுக்குள் 
சிக்கிவிடாது


கிளையொன்றில் அமரும்
பறவையிடம் 
காரணங்கள் ஏதுமிருக்கத் தேவையில்லை..
பறத்தலுக்கும்.

Friday 20 March 2020

வா!
பட்டாம்பூச்சி பார்ப்போம்!!
வா!
பட்டாம்பூச்சி ஆவோம் 🧡

Tuesday 17 March 2020

உறைதற்பொருட்டு
கட்டிய கூடு சிறையானால்
சிறுபுள் என் செய்யும்?
இறக்கைகளைக் கொஞ்சம் மடித்து வைக்கிறேன்
பறக்கவே இல்லாமல் 
வெறுமனே விரித்திருப்பதில்
வலிமிகுகிறது

Sunday 9 February 2020

பெயர் தெரியாத அந்தப் பறவையைப் பார்த்தபடி நடக்கிறேன்
என் பெயர் தெரியாத அந்தப் பறவையும்
என்னைப் பார்த்தபடி பறக்கிறது
இயற்கை இருவரையும்
ஒரு நொடி 
ஒரு புள்ளியில் இணைத்து
ஆசீர்வதிக்கிறது

Thursday 6 February 2020

உன் மௌனத்தோடு 
மோதித்தோற்று
சேதாரமாகித் திரும்பும் என் சொற்களில் உறைந்திருக்கிறது
உன் உயிரின் சிறுதுளி 🖤

Saturday 11 January 2020

மனதுக்குள் 
ஆர்ப்பரிக்காது
பேசாமலிரு 
மௌனமே 😷

Thursday 9 January 2020

விடமூறிய வலியொன்று விரல் வழி ஊடுருவ
விக்கித்து நிற்கின்றேன்.
எப்போது நிகழ்ந்ததென அறியாத பொழுதென்றில்
எதற்காகவென்ற அறிதலுமின்றியே
கால்கட்டை விரல் நகக்கண்ணில்
பாய்ந்ததொரு மின்னலாய்
நரம்புகள் வழிகடந்து
நாபிக்கமலமதில் நஞ்சினைப் பாய்ச்சி
நெஞ்சாங்கூட்டில் நெருப்பெனத் தகித்து
தொண்டைக் குழியினில் சொற்களைச் சிதைத்து
விழியிரண்டின் பார்வையைப் பறித்து
நடமாடவிட்டதெனை நடைப்பிணமாய்.
வலி என்பது வலிக்காமல்
விடமென்பது உயிர் பறிக்காமல்
வார்த்தைகளற்ற மௌனமாய்
நெருக்கமற்ற இடைவெளியாய்
உறக்கம் விழுங்கிய இரவுகளாய்
நினைவுகள் தின்று வாழும் நிர்க்கதியில் ஊசலாடும் உயிரொன்று.

Thursday 2 January 2020

யானை கண்ட விழியற்றவனென
வாழ்க்கையை உணர்கிறேன்
ஒரு கை தலையில்
கரடுமுரடென
காதுகள் தொடுகையில்
கிழிந்து தொங்க
தந்தங்கள் குத்திக் கிழிக்க
வாலொன்று சாட்டையென வீச
துதிக்கையில் சறுக்கி விழுகையில்
கூர்விழிப் பார்வைகூட
ஒளிக்கீற்றைத் தரவியலாமல்
பெருத்த வயிற்றின் நிழல் மொத்தத்தில்
காரிருளுக்குள் கரைந்து போனது
கீரை ஆய்வதுபோல்
மனதைக் கிள்ளிப் போடுகிறாய்
தூசுதும்பு அகற்றும் முகமாய்
முறத்தில் புடைக்கப்படும் அரிசியென
அல்லாடுகிறேன்
சல்லடைக் கண்களென 
உன் வார்த்தைகள் துளைத்தெடுக்க
மேற்புறத்தில் மீந்த கசடென
தூக்கியெறிந்துவிட்டுச் செல்லும் 
உன் இயல்பை ரசிக்கவே செய்கிறேன்
ஒரு சமையல் பொழுதுக்குள் நேர்ந்துவிட்ட பிணக்கை
செரித்துத் தானே தீரவேண்டும் 💜